சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஜா சாம்பியன் – குகேஷுக்கு பின்னடைவு!
சென்னை: குவான்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 4-வது பதிப்பு வேளச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்தது. இதன் கடைசி மற்றும் 7-வது சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரோஜா, இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசியுடன் மோதினார். 41-வது நகர்த்தலின் போது இந்த ஆட்டம் டிராவில் முடிந்ததை அடுத்து, மொத்தம் 4.5 புள்ளிகளுடன் அலிரேசா ஃபிரோஜா முதலிடம் பிடித்துச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இத்தொடரின் மற்ற ஆட்டங்களில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹான்ஸ் நீமனுடன் மோதிய ஆட்டம் 19-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. மற்றொரு போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான நிஹால் சரின் மற்றும் எம்.பிரனேஷ் மோதிய ஆட்டம் 48-வது நகர்த்தலில் டிராவானது. அதேவேளையில், 3.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்த உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டரான நோதிர்பெக் அப்துசத்தோரோவ், ரஷ்யாவின் டிமிட்ரி ஆண்ட்ரெய்கினை எதிர்கொண்டு 37-வது நகர்த்தலின் போது அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
இத்தொடரில் தொடர்ந்து 2 வெற்றிகளையும், அதன் பின்னர் 5 டிராவையும் பதிவு செய்து அலிரேசா ஃபிரோஜா முதலிடம் பிடித்தார். அவரைத் தவிர்த்து, இத்தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே வீரரான டிமிட்ரி ஆண்ட்ரெய்கின், அர்ஜூன் எரிகைசியுடன் இணைந்து தலா 4 புள்ளிகளுடன் போட்டியை நிறைவு செய்தார். அப்துசத்தோரோவ், நிஹால் சரின், எம்.பிரனேஷ் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் முறையே 4, 5 மற்றும் 6-வது இடங்களைப் பிடித்தனர். அமெரிக்காவின் ஹான்ஸ் நீமன் 3 புள்ளிகளுடன் 7-வது இடத்தைப் பிடித்தார்.
உலகச் சாம்பியனான இந்தியாவின் குகேஷுக்கு இத்தொடர் பெரும் பின்னடைவாக அமைந்தது. தான் விளையாடிய ஏழு போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்து, வெறும் 2 புள்ளிகளுடன் அவர் அட்டவணையில் கடைசி இடத்தைப் பிடித்தார். சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற இப்போட்டியில் சர்வதேச அளவிலான முன்னணி செஸ் வீரர்கள் பலர் பங்கேற்றுத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.




