இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மருத்துவ சிகிச்சைக்காக இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டனான இம்ரான் கானின் உடல்நிலை குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக இம்ரான் கானை இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக மாற்ற உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இம்ரான் கானை 48 மணி நேரத்திற்குள் ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். அவர் செப்டம்பர் 16-ம் தேதி வரை அங்கு சிகிச்சையில் இருப்பார் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இம்ரான் கானின் உடல்நிலையை ஆய்வு செய்வதற்காக மருத்துவக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதில் அவரது தனிப்பட்ட மருத்துவருடன், அவரது சகோதரி டாக்டர் அலீமா கானும் இடம்பெறுவார் என உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டது குறித்து அவரது ஆலோசகர் ஜுல்பிகார் அலி புகாரி வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு மிகவும் வரவேற்கத்தக்கது என்றும், இது இன்னும் முன்கூட்டியே நடந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இம்ரான் கானை முன்கூட்டியே மருத்துவமனைக்கு மாற்றியிருந்தால், அவரது கண் மற்றும் பொதுவான உடல்நிலை இந்த அளவுக்கு மோசமடைந்திருக்காது என்றும் ஜுல்பிகார் அலி புகாரி தெரிவித்துள்ளார்.



