விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
சமூக வலைதளங்களில் சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது என்றும், மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் விமர்சகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை முதல்வர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் அதிகார போதையில் மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான் என குறிப்பிட்டுள்ளார். அதே பாதையில் தற்போதைய அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சமூக வலைதளங்களில் ஆளும் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்கள் காரணமாக, மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த தவெக தொண்டருக்கு பதிலளித்த ‘வி தி லீடர்ஸ்’ தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு மற்றும் கைது போன்ற அதிகார நடவடிக்கைகள் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதல்வரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதல்வர் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது என்றும், எனவே இந்த போக்கை உடனடியாக தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.



