உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்திடம் 2-4 என இந்தியா தோல்வி; பாகிஸ்தானுடன் நாளை மோதல்
நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில், ஆடவர் பிரிவில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் நிக்கோலஸ் பாண்டுராக் கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என்ற முன்னிலையைப் பெற்றுத் தந்தார். இதற்கு இந்திய அணி சிறப்பாக பதிலடி கொடுத்தது. 16-வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடிக்க, 24-வது நிமிடத்தில் தில்பிரீத் சிங் கோல் பதிவு செய்தார். இதன் மூலம் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது.
ஆனால், 2-வது பாதியில் இங்கிலாந்து அணி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. 38-வது நிமிடத்தில் ஸ்டூவர்ட் ரஷ்மியரும், 42-வது நிமிடத்தில் ஹென்றி கிராஃப்டும் கோல் அடித்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 3-2 என முன்னிலை பெற்றது.
ஆட்டம் முடிவடைய 6 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், நிக்கோலஸ் பாண்டுராக் மீண்டும் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணியின் முன்னிலை 4-2 என அதிகரித்தது. அதன் பின்னர் கடைசி வரை இந்திய அணி போராடியபோதிலும், மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை.
இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியைப் பதிவு செய்துள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை (19-ம் தேதி) பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இந்திய அணிக்கு இந்த ஆட்டம் முக்கியமானதாக அமைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை குறைந்தபட்சம் டிரா செய்தால் மட்டுமே இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். ஒருவேளை தோல்வியை சந்தித்தால், உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறும் நிலை ஏற்படும்.



