ஓடிடியில் ‘டாக் ஷோ’ தொகுப்பாளராக நடிகர் மாதவன்: பிரபல நிகழ்ச்சியின் புதிய பதிப்பு தொடக்கம்!
மும்பை: இந்தித் தொலைக்காட்சியில் கடந்த 2000-ம் ஆண்டில் ஒளிபரப்பாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற பிரபல ‘டாக் ஷோ’ நிகழ்ச்சியான ‘ஜீனா இஸி கா நாம் ஹே’, தற்போது ஓடிடி தளத்திற்காகப் புதிய வடிவில் மீண்டும் அறிமுகமாகிறது. ஜீ தொலைக்காட்சியில் வெளியான இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாலிவுட் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
முன்னதாக, இப்புகழ்பெற்ற நிகழ்ச்சியை மறைந்த முன்னணி நடிகரும் பிரபலத் தொகுப்பாளருமான ஃபரூக் ஷேக் தொகுத்து வழங்கி மக்களின் மனங்களைக் கவர்ந்திருந்தார். தற்போது ‘ஜீனா இஸி கா நாம் ஹே – 2.0’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இதன் மறுபதிப்பு, ‘ஜீ-5’ (ZEE5) ஓடிடி தளத்தில் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. இப்புதிய பதிப்பை பிரபல நடிகர் மாதவன் தொகுத்து வழங்கவுள்ளார்.
இது குறித்துப் பேசிய நடிகர் மாதவன், “இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் மதிப்பமிக்க நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘ஜீனா இஸி கா நாம் ஹே’வின் அடுத்தகட்டப் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். ஃபரூக் ஷேக் போன்ற ஒரு அற்புதமான கலைஞர் உருவாக்கிய கலை மரபைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது பெருமையையும் அதேவேளையில் மிகுந்த பொறுப்பையும் தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “இந்நிகழ்ச்சி வெறும் பிரபலங்களின் வெற்றிக் கதைகளைப் பற்றி மட்டுமே பேசுவது அல்ல; மாறாக அவர்களை உருவாக்கிய மனிதர்கள், உறவுகள், அனுபவங்கள் மற்றும் அவர்களின் உணர்வுப்பூர்வமான வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியதாகும். இந்த அழகிய கதைகளைப் புதிய தலைமுறைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.





