‘ஜனநாயகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ஜீ5 தமிழ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளது. அதில், “தங்கமே, தளபதி, ஜனநாயகன் ஆகஸ்ட் 21-ம் தேதி ஜீ5-ல் உங்களைச் சந்திக்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு வீடியோவில், அரண்மனை போன்ற பிரம்மாண்டமான வீட்டிலிருந்து ஜீப் ஒன்று புறப்படுகிறது. அந்த ஜீப் கூவம், நேப்பியர் பாலம் வழியாகச் செல்லும்போது, அதனை தமிழக முதல்வர் விஜய் ஓட்டிச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஜீப்பின் பக்கக் கண்ணாடியில் விஜயின் முந்தைய திரைப்படங்களில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்கள் மாறிமாறி தோன்றுகின்றன.
தொடர்ந்து ஜீப் தலைமைச் செயலகம் முன்பு வந்து நிற்கும் நிலையில், பின்னணியில் விஜய் நடந்து வரும் காட்சி காட்டப்படுகிறது. பின்னர் அந்தக் காட்சி மாறி, தற்போதைய கோட் சூட் உடையில் முதல்வர் விஜய் கம்பீரமாக நடந்து வருவது போன்று வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், சென்சார் பிரச்சினை, இணையத்தில் முழுப் படம் கசிந்தது, ஏ சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. இதையடுத்து, ஒருவழியாக ஜூலை 23-ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராகவும் என்டர்டெயினராகவும் இருந்து வந்த விஜய், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை தனது கடைசி படமாக அறிவித்திருந்தார். பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாக உள்ளது.



