முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்
தலைமைச் செயலகத்தில் முதல்வருக்கான புதிய அறையை தயார் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பே பணிகள் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இது தவெக அரசு கூறும் வெளிப்படைத்தன்மையா என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தில் இருந்த முதலமைச்சரின் அறையை அருகிலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றுவதற்கான பணிகள் கடந்த மாதமே தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியானதாக குறிப்பிட்டுள்ளார். அதே பணிக்கான டெண்டர் அண்மையில் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி இருக்கும் நிலையில், முதல்வரின் அறையை மாற்றுவது அவசியம்தானா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் தினகரன் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தப் பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட டெண்டரில் வெளிப்படைத்தன்மையின்றி பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 13-ம் தேதி நாளிதழ்களில் டெண்டர் தொடர்பான விளம்பரம் வெளியிடப்பட்டு, நான்கு நாட்கள் கழித்து இணையதளத்தில் ஆவணங்கள் பதிவேற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த ஆவணங்களில் பணிக்கான மொத்த மதிப்பு குறிப்பிடப்படாமல் மறைக்கப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் வெளிப்படைத்தன்மைமிக்க ஆட்சி என்று கூறுவதற்கான தகுதியை தவெக அரசு இழந்துவிட்டதாகவே பார்க்க வேண்டியுள்ளதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் அறையை மாற்றுவதற்கான டெண்டர் அறிவிப்புக்கு முன்பாகவே பணிகள் தொடங்கியது எப்படி, யாருடைய உத்தரவின் பேரில் பணிகள் தொடங்கப்பட்டன, எந்த அடிப்படையில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டார், பணிகள் தொடங்கிய பின்னர் டெண்டர் கோரப்பட்டது ஏன், டெண்டர் அறிவிக்கப்பட்ட பின்னரும் அதற்கான ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாதது ஏன் என பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அடுக்கடுக்கான கேள்விகளுக்கு முதல்வர் விஜய் அளிக்கும் பதில் என்ன என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் ஊழலற்ற, நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையான ஆட்சியே தங்களது இலக்கு என்று முதல்வர் கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வருக்கான புதிய அறையை மாற்றுவது தொடர்பான டெண்டரிலேயே இதுபோன்ற விதிமுறை மீறல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மற்ற துறைகளில் டெண்டர்கள் எவ்வாறு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என்ற சந்தேகம் எழுவதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.
எனவே, விளம்பரங்களிலும் மேடைப் பேச்சுகளிலும் வெளிப்படைத்தன்மை என்ற சொல்லை பெயரளவுக்கு பயன்படுத்தாமல், தமது தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தில் அதை முழுமையாக செயல்படுத்த முதல்வர் விஜய் முன்வர வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.



