கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டம் ஹனூர் அருகேயுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில் கடந்த 15-ம் தேதி அதிகாலையில் மானை வேட்டையாடச் சென்றதாக கூறி சாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவரும் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கால்நடைகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். மான் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி 3 தமிழர்களை கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இரு மாநில எல்லைப் பகுதியில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதால், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு கூடுதலாக நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முன்னதாகப் பேசிய திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், கர்நாடகாவில் கால்நடைகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் அம்மாநில வனத்துறையால் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக் கொன்றது மனித உரிமை மீறல் என்றும், பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் பேசுகையில், கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழர்களுக்கு நியாயம், நிவாரணம் மற்றும் நீதி கிடைக்க சிபிஐ விசாரணை அவசியம் என்றும், பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் பேசும்போது, தமிழர்களின் உயிரை துப்பாக்கிக் குண்டுகள் தீர்மானிக்கக் கூடாது என்று தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசுக்கு தமிழக அரசும், முதல்வரும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, கர்நாடக வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தமிழர்களின் உடல்களும் இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவர்களது சொந்த கிராமங்களில் நேற்று அடக்கம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



