2026-ல் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத திரைப்படம் ‘துரந்தர்’: நெட்பிளிக்ஸ் தகவல்
ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘துரந்தர்’ திரைப்படம், 2026-ம் ஆண்டில் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத திரைப்படமாக சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதித்யா தார் இயக்கிய இப்படத்தின் அடுத்த பாகமான ‘துரந்தர்: த ரிவெஞ்ச்’ கடந்த மார்ச் மாதம் வெளியானது.
இந்தியில் உருவான ‘துரந்தர்: த ரிவெஞ்ச்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் புதிய சாதனைகளைப் படைத்தது.
இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக ரூ.1,000 கோடியைத் தாண்டிய முதல் பாலிவுட் திரைப்படம் என்ற மைல்கல்லை ‘துரந்தர்: த ரிவெஞ்ச்’ எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘துரந்தர்’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் இணைந்து உலகளவில் ரூ.3,100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
திரையரங்க வெற்றியைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் ‘துரந்தர்’ திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2026-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ‘துரந்தர்’ திரைப்படம் 3.7 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.
மேலும், நெட்பிளிக்ஸின் ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களுக்கான உலகளாவிய பட்டியலில் 22 நாடுகளில் ‘துரந்தர்’ முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நெட்பிளிக்ஸின் இணை தலைமை நிர்வாக அதிகாரி ரெட் சரண்டோஸ் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்திய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கான சர்வதேச வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக ரெட் சரண்டோஸ் குறிப்பிட்டுள்ளார். 2024-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வாரமும் உலகளாவிய டாப் 10 பட்டியலில் குறைந்தபட்சம் ஒரு இந்திய திரைப்படம் அல்லது வெப் தொடர் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமா சர்வதேச பொழுதுபோக்கு சந்தையில் வலுவான இடத்தைப் பிடித்து வருவதற்கு ‘துரந்தர்’ படத்தின் வெற்றி முக்கியமான உதாரணமாக அமைந்துள்ளதாகவும் ரெட் சரண்டோஸ் தெரிவித்துள்ளார்.



