உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
உக்ரைன் ராணுவம் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களில் ரஷ்யாவைச் சேர்ந்த வைல்டுபெரிஸ் இ-காமர்ஸ் நிறுவனத்தின் 7 சரக்கு குடோன்கள் தீக்கிரையாகியுள்ளன. ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் வைல்டுபெரிஸ் நிறுவனத்துக்கு தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான சரக்கு சேமிப்பு கிடங்குகள் உள்ளன.
மாஸ்கோ அருகே உள்ள கெலிடினோ பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் குடோனை குறிவைத்து ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் குடோன் முழுவதுமாக தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் டெமோடிடெவோ, வினுகோவா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் சரக்கு குடோன்களும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
ஒட்டுமொத்தமாக 7 சரக்கு குடோன்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் நாசமானதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக மாஸ்கோ மாகாண ஆளுநர் ஆண்ட்ரே வெளியிட்ட தகவலில், ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உக்ரைன் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி அளித்து வருவதாக ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உக்ரைனின் ராணுவ இலக்குகளை குறிவைத்து 1,550 ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், போர் விமானங்கள் வாயிலாக 1,560 குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய தரப்பு கூறியுள்ளது.
மேலும், 62 ஏவுகணைகள் மூலமும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும், குறிப்பாக அந்நாட்டின் ஆயுத உற்பத்தி ஆலைகளை குறிவைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



