கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சட்டப்பேரவையில் பாஜக கடும் குற்றச்சாட்டு
கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டம் ஹனூர் அருகே உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கடந்த 15-ம் தேதி அதிகாலை மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி 3 தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து வனத்துறை அலுவலகங்கள் சூறையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட வேட்டைத்தோணி சாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகியோரின் உடல்கள் இறுதிச்சடங்குகளுக்குப் பின்னர் அவர்களது சொந்த கிராமங்களில் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.
இதனிடையே, 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் ஷாக்யா வனப்பகுதியில் கொள்ளேகால் துணை ஆணையர் தினேஷ் குமார் மீனா தலைமையில் போலீஸார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது அப்பகுதியில் சிதறிக் கிடந்த காலணிகள் மற்றும் பாறைகளுக்கு இடையே கிடந்த தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் சேகரித்தனர்.
அரசு நடத்திய என்கவுன்ட்டர் என பாஜக குற்றச்சாட்டு
கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா இந்த விவகாரத்தை எழுப்பி, ஹனூர் வனப்பகுதியில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அரசால் நடத்தப்பட்ட என்கவுன்ட்டர் என்று குற்றம்சாட்டினார்.
அப்பாவி விவசாயிகளை வேட்டைக்காரர்கள் எனக் கூறி பொய்யாக சுட்டுக்கொன்றுள்ளதாகவும், இந்த சம்பவத்துக்கு எதிராக கர்நாடகாவில் மக்கள் போராடி வருவதாகவும் ஆர்.அசோகா தெரிவித்தார். தமிழக முதல்வர் விஜய் இந்தக் கொலைகளை கண்டித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த சம்பவத்தால் கர்நாடகாவில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உரிய நீதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்.அசோகா வலியுறுத்தினார்.
விசாரணைக்குப் பிறகே விவாதிக்கப்படும்: துணை முதல்வர்
இதற்கு பதிலளித்த துணை முதல்வர் பரமேஷ்வர், இந்த சம்பவத்தை அரசு செய்த கொலை என்று கூறக்கூடாது என்று தெரிவித்தார். விசாரணை நிறைவடைந்த பின்னர், இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
துணை முதல்வரின் பதிலை ஏற்க மறுத்து பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே இந்த விவகாரம் தொடர்பான விவாதம் மேலும் தீவிரமடைந்துள்ளது.



