சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஷெசாத் பட்டி, தற்போது பிரேசில், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்தவராக கூறப்படும் அவர், சமூக வலைதளங்களில் பிரபலமாக தன்னை முன்னிறுத்தி வந்துள்ளார்.
பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்து, அவர்களை தனது குழுவில் ஷெசாத் பட்டி இணைத்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சுதந்திர தின விழாவின்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த அவர் சதித்திட்டம் தீட்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய உளவுத்துறை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ரகசிய அறிக்கையை சமர்ப்பித்தது. இதையடுத்து ஷெசாத் பட்டி குழுவை சேர்ந்தவர்களை கண்காணித்து கைது செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரகசிய உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் அனைத்து மாநில காவல் துறைகளும் இணைந்து அந்த குழுவினரை ரகசியமாக கண்காணித்தன.
சுதந்திர தின விழாவுக்கு முன்பாக, கடந்த 12-ம் தேதி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 62 பேர், ஹரியாணாவில் 52 பேர், டெல்லியில் 51 பேர், பஞ்சாபில் 44 பேர், ராஜஸ்தானில் 15 பேர், மகாராஷ்டிராவில் 8 பேர், உத்தராகண்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகா, குஜராத், பிஹாரில் தலா 3 பேரும், தெலங்கானா, இமாச்சல பிரதேசம், காஷ்மீர், கேரளாவில் தலா 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள், கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான ஆயுதங்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் செயல்பட்டதாக கூறப்படும் ஷெசாத் பட்டி குழுவை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முழுமையாக அழித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் அவர்களின் தீவிரவாத சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பாதுகாப்பு படைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, 14 மாநிலங்களை சேர்ந்த பல்வேறு நகரங்களில் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தியதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுதந்திர தினத்துக்கு முன்பாக ஷெசாத் பட்டி குழுவினர் கூண்டோடு பிடிபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தீவிரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை பிரதமர் நரேந்திர மோடி அரசு மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஷெசாத் பட்டி குழுவினரிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள், கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் நடவடிக்கைகளுக்கு ஐஎஸ்ஐ அமைப்பு நிதியுதவி அளித்துள்ளதாகவும், பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஷெசாத் பட்டி குழுவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.



