பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் பணியில் ரூ.98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கண்டெடுப்பு
பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியின்போது கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கக் கட்டிகள், அரிய தங்க நாணயங்கள் மற்றும் எண்கள் பொறிக்கப்பட்ட தங்கப் பட்டைகள் அடங்கிய மிகப்பெரிய புதையலை கண்டெடுத்துள்ளனர். இந்தப் புதையலின் மதிப்பு சுமார் ரூ.98 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு வடமேற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மொண்டே பகுதியில் இந்த புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அங்கு 1899 முதல் 1970-ம் ஆண்டு வரை மதுபான உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது அந்தப் பழமையான கட்டிடம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
‘சிஏடபிள்யூ ஊஸ்ட் லான்டரன்’ என்ற சமூக நல அமைப்பின் சார்பில் அந்தப் பகுதியில் புதிய அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பழைய கழிவுநீர் குழாய்களை மாற்றுவதற்காக பூமியில் பள்ளம் தோண்டியபோது எதிர்பாராதவிதமாக தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த புதையலை 18 வயதான கோபெ என்ற கட்டுமானப் பணியாளர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கழிவுநீர் குழாய்களை மாற்றுவதற்காக பள்ளம் தோண்டியபோது திடீரென ஏதோ கிடப்பதைப் பார்த்ததாகவும், முதலில் அவை யூரோ நாணயங்கள் என நினைத்ததாகவும் தெரிவித்தார். பின்னர் அவை தங்கக் கட்டிகள் என்பது தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.
கண்டெடுக்கப்பட்ட புதையலில் தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள் மற்றும் எண்கள் பொறிக்கப்பட்ட தங்கப் பட்டைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.98 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுபான ஆலை உரிமையாளர் தியோபிலஸ் வான் அஸ்ஷே என்பவருக்காக கட்டப்பட்ட பிரம்மாண்ட மாளிகையின் அடித்தளச் சுவருக்குள் ஒரு பையில் இந்தப் புதையல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் விசாரணை
புதையல் கண்டுபிடிக்கப்பட்டதும் அதிகாரிகள் அந்தப் பகுதியை பாதுகாப்புப் பகுதியாக அறிவித்தனர். பின்னர் கண்டெடுக்கப்பட்ட தங்கப் பொருட்கள் அனைத்தும் பிரஸ்ஸல்ஸில் உள்ள பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. தற்போது இந்தப் புதையலுக்கு உண்மையான உரிமையாளர் யார் என்பதை தீர்மானிப்பதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.
கிழக்கு ஃபிளாண்டர்ஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தைச் சேர்ந்த ஹன்னே ஒலிவியர் கூறுகையில், முதலில் கண்டெடுக்கப்பட்ட தங்கம் திருடப்பட்டதா அல்லது ஏதேனும் குற்றச் செயலுடன் தொடர்புடையதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்தப் புதையலுக்கு கட்டுமானப் பணியை மேற்கொண்ட நிறுவனங்கள், சமூக நல அமைப்பு மற்றும் தியோபிலஸ் வான் அஸ்ஷே குடும்பத்தின் வாரிசுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உரிமை கோரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெல்ஜியம் நாட்டின் சட்டப்படி, புதையலைக் கண்டுபிடித்தவர்கள் அதன் உண்மையான உரிமையாளர்கள் உரிமை கோர முன்வருவதற்கு குறைந்தது ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



