மாநகர பேருந்துகளில் குத்தகை நடத்துநர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
மாநகர பேருந்துகளில் குத்தகை முறையில் நடத்துநர்களை நியமிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதிய அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களுக்கு பேருந்து நிறுத்தங்களில் பயணச்சீட்டு வழங்குவதற்காக 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை தவெக அரசு வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையிலான நியமனங்களை ஜனநாயகம் மற்றும் சமூகநீதியில் அக்கறை கொண்ட எந்த அரசாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் கொள்கைகளில் தவெக அரசுக்கு நம்பிக்கை இருந்தால், மாநகர போக்குவரத்துக் கழகம் மட்டுமின்றி அனைத்து அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் குத்தகை முறையிலான நியமனங்களை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதிய அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
24 மணி நேரத்தில் 5 கொலைகள்: அன்புமணி கவலை
அன்புமணி வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்றதாக கூறப்படும் தொடர் கொலைச் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் கோயில் திருவிழாவில் மது போதையால் ஏற்பட்ட மோதலில் இரு இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் 25 வயது இளைஞர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாகவும், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நரேஷ்குமார் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ராதா என்ற பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் உட்பட கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் கொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார். எனவே, கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுத்து, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



