இந்தியாவில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்கள் தாயகம் திரும்ப இலங்கை நாடாளுமன்றம் அனுமதி
உள்நாட்டுப் போர் காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான குடிவரவு அனுமதிக்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கைக்கு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு தேவையான நடைமுறைகளை மேற்கொண்டு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைக்கு அந்நாட்டு அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 1983-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கிய காலகட்டத்தில், அந்நாட்டு ராணுவம் மற்றும் சிங்களவர்களால் தமிழர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இலங்கையைச் சேர்ந்த ஏராளமான தமிழ் மக்கள் பாதுகாப்பு தேடி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்தனர்.
1983-ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு மட்டும் 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையமான UNHCR, தமிழக மற்றும் இந்திய அரசுகளின் உதவியுடன் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் செயல்பட்டு வரும் 108 இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களில் சுமார் 58 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். இதேபோல், முகாம்களுக்கு வெளியே காவல் நிலையங்களில் பதிவு செய்து வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 34 ஆயிரமாக உள்ளது. மேலும், ஒடிசா மாநிலம் மால்கன்கிரியில் உள்ள முகாமிலும் 60 பேர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகள் குறித்து இலங்கை ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கொழும்பில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் உள்ள அகதிகளில் சிலர் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் உதவியுடனும், மற்றவர்கள் சுயமாகவும் இலங்கைக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
இலங்கைக்கு மீண்டும் வர விரும்பும் அகதிகளுக்கு தேவையான குடிவரவு அனுமதியை வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கைக்கு திரும்ப விரும்புவோர் கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறியவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலம் தங்களது இலங்கை குடியுரிமை அல்லது அடையாளத்தை உறுதி செய்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, கொலை, அரசுக்கு எதிரான துரோகம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடாதவர்கள் என்பதையும் உறுதி செய்ய வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் நபர்களுக்கு தற்காலிக வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கப்பட்டு, அதன் மூலம் இலங்கைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று இலங்கை ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக இந்தியாவில் அகதிகளாக வசித்து வரும் ஈழத் தமிழர்களில் தாயகம் திரும்ப விரும்புவோருக்கு இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.



