காங்கோவில் வேகமாகப் பரவும் எபோலா: உயிரிழப்பு 2,000-ஐ கடந்தது; 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளது. இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிதான பண்டிபுக்யோ வகை எபோலா வைரஸ் காரணமாக இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய எபோலா பரவல்களுடன் ஒப்பிடும்போது, தற்போதைய பாதிப்பு மிகவும் வேகமாக அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 4,381 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2,011 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 704 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த எபோலா பரவல் மே 15-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, வைரஸ் பரவல் பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கியிருக்கலாம் என்றும், அதிகாரப்பூர்வமாக கண்டறியப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே தொற்று பரவத் தொடங்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமெடுக்கும் உயிரிழப்பு
இந்தப் பாதிப்பின் தீவிரத்தை வெளிப்படுத்தும் வகையில், முதல் 1,000 உயிரிழப்புகளை எட்ட சுமார் 9 வாரங்கள் ஆன நிலையில், அடுத்த 1,000 உயிரிழப்புகள் வெறும் 3 வாரங்களிலேயே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தற்போதைய எபோலா பரவல் வரலாற்றிலேயே மிக வேகமாக அதிகரித்து வரும் பாதிப்புகளில் ஒன்றாக மாறியுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொற்று வேகமாக அதிகரித்து வருவதால், நோயாளிகளை அடையாளம் காணுதல், தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காங்கோவில் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் சர்வதேச சுகாதார அமைப்புகளிடையேயும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.



