எலான் மஸ்க்கின் தினசரி சராசரி வருமானம் ரூ.8,312 கோடி: ஓராண்டில் சொத்து மதிப்பு உயர்வு
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 2025 ஜூலை 27 முதல் 2026 ஜூலை 27 வரையிலான ஓராண்டு காலத்தில் அவரது சொத்து மதிப்பு சுமார் 320 பில்லியன் டாலர்கள், அதாவது சுமார் ரூ.30 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் அவரது தினசரி சராசரி வருமானம் சுமார் ரூ.8,312 கோடியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பெஸ்ட் புரோக்கர்ஸ்’ நிறுவனம், ஃபோர்ப்ஸ் வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூன் 12-ம் தேதி ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் பொதுப் பங்குகளை வெளியிட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது, எலான் மஸ்க் உலகின் முதல் மகா கோடீஸ்வரராக உருவெடுத்ததாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கடந்த மாதம் அந்நிறுவனத்தின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்ததால், தற்போது அவரது சொத்து மதிப்பு 690 பில்லியன் டாலர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்கைத் தவிர, மைக்கேல் டெல், லாரி பேஜ், செர்ஜி பிரின் மற்றும் டெதர் நிறுவனத்தின் ஜியான் கார்லோ தேவாசினி உள்ளிட்டோரும் கடந்த ஓராண்டில் கணிசமான அளவு சொத்து மதிப்பை அதிகரித்துள்ளனர். டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மைக்கேல் டெல், ஓராண்டில் 107.6 பில்லியன் டாலர்களை கூடுதல் சொத்து மதிப்பாக பெற்றுள்ளார். இதன் மூலம் அதிக அளவில் சொத்து சேர்த்தவர்களின் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இதனிடையே, ‘டீப்சீக்’ நிறுவனத்தின் நிறுவனர் லியாங் வென்ஃபெங்கின் சொத்து மதிப்பிலும் மிகப்பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டில் 1 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு, 2026-ம் ஆண்டில் 39.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இது ஒரே ஆண்டில் 3,850 சதவீத வளர்ச்சியாகும். இதன் மூலம் அவர் உலகின் முதல் 50 பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.
பங்குச் சந்தையில் அவ்வப்போது சரிவு ஏற்பட்டாலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளித் துறைகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆதிக்கம், முன்னணி தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளித் துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி உலக பணக்காரர்களின் செல்வ உயர்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.



