லஷ்கர்-இ-தொய்பா மூத்த கமாண்டர் மர்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸார் தீவிர விசாரணை
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டர் காரி சயீத் அப்துல் அஜீஸ் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மசூதியின் நுழைவாயிலில் திடீரென சரிந்து விழுந்த அவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்த காரி சயீத் அப்துல் அஜீஸ், ஜம்மு-காஷ்மீரில் என்கவுன்ட்டர்களில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் குடும்பங்களுக்கு உதவி வழங்கும் பிரிவுக்கு பொறுப்பாளராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள குபா மசூதிக்கு தொழுகைக்காக காரி சயீத் சென்றுள்ளார். அப்போது மசூதியின் நுழைவாயில் பகுதியில் திடீரென மயங்கி கீழே விழுந்த அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.
மசூதிக்கு செல்வதற்கு முன்பாக காரி சயீத் ஒரு உணவகத்தில் உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதற்கும் அவரது திடீர் உயிரிழப்புக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல்நிலை மற்றும் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பான கூடுதல் தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கடந்த சில ஆண்டுகளில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பலர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. 2008 மும்பை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த சுமார் 30 பேர் கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக லஷ்கர் தீவிரவாதி ரிஸ்வான் ஹனிஃப் பேசும் வீடியோ ஒன்றும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அல்-காய்தா மற்றும் தலிபான் அமைப்புகளுடனான தொடர்புகள் காரணமாக 2005-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் லஷ்கர்-இ-தொய்பா தடை செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் இதுபோன்ற கொலைகள் குறித்து வெளிப்படையாக தெரிவித்திருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இந்தச் சூழலில், லஷ்கர்-இ-தொய்பா மூத்த கமாண்டர் காரி சயீத் அப்துல் அஜீஸ் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.



