டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: தமிழக அமைச்சர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சனம்
தமிழகத்தில் சில அமைச்சர்கள் டெண்டர்களில் ஊழல் செய்யத் தொடங்கியுள்ளதாகவும், அதுதொடர்பான ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் செயல்பாடுகளை முதல்வர் விஜய் கண்காணித்து, அவர்களுக்கு உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ‘வி த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அறிவுச்செல்வி கலந்து கொண்டார். அமைப்பின் நிர்வாகிகளான கரு.நாகராஜன், சாய் சத்யன், மனோகர், நாச்சியப்பன், சுமதி வெங்கடேசன், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஒரு மாதத்தில் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு
நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, மாற்றம் என்பது ஒவ்வொரு தனிநபரிடமிருந்தும் தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார். மறைந்த நடிகர் விவேக் விட்டுச் சென்ற ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணியை ‘வி த லீடர்ஸ்’ அமைப்பு தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், இந்த ஒரு மாதத்தில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கடந்த 16 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 100 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தாமிரபரணி, வைகை, காவிரி உள்ளிட்ட முக்கிய ஆறுகளை தூய்மைப்படுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அண்ணாமலை கூறினார்.
73 நாட்களில் 20 லட்சம் பேர் இணைந்ததாக தகவல்
‘வி த லீடர்ஸ்’ அமைப்பு தொடங்கப்பட்டு 73 நாட்களில் 20 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார். அமைப்பின் அடுத்த இலக்கு 50 லட்சம் உறுப்பினர்களை இணைப்பது என்றும், அந்த எண்ணிக்கையை எட்டிய பிறகு அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றி மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
தங்களது அரசியல் செயல்பாடுகள் டெல்லி அல்லது போயஸ் கார்டன், பனையூர், கோபாலபுரம் போன்ற குறிப்பிட்ட இடங்களில் இருந்து முடிவெடுக்கும் வகையில் இருக்காது என்றும், ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்திலும் மக்களின் கருத்துகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் அரசியலை உருவாக்குவதே நோக்கம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
புதிய அரசுக்கு ஓராண்டு அவகாசம்
தமிழகத்தில் தற்போது புதிய முதல்வர் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அண்ணாமலை, பல எம்.எல்.ஏ.க்கள் முதல்முறையாக சட்டப்பேரவைக்குச் சென்றிருப்பதால் அவர்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்கப்படும் என்றார். அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், தவறுகள் நடைபெறும் பட்சத்தில் அதனை தட்டிக்கேட்க தயங்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக பட்ஜெட்டில் சேமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ரூ.15 ஆயிரம் கோடி நிதியை நீர்நிலைகள் மேம்பாடு, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துதல் மற்றும் கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட பணிகளுக்கு முதல்வர் பயன்படுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு
தவெக அமைச்சர்கள் சிலர் டெண்டர் நடவடிக்கைகளில் ஊழல் செய்யத் தொடங்கியுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். இதுதொடர்பான ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, முதல்வர் விஜய் தனது அமைச்சர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தன்னை தொடர்ந்து பாஜகவின் ‘பி-டீம்’ என சிலர் விமர்சித்து வருவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார். அமித் ஷா தன்னை டெல்லிக்கு அழைத்து பொறுப்பேற்குமாறு கூறியதாகவும், ஆனால் தமிழகத்திலேயே இருந்து பணியாற்ற விரும்புவதாக தான் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். தான் எப்போதும் ஒரு கொள்கையின் அடிப்படையிலேயே அரசியல் செய்வதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
நேர்மையான அரசியலே இலக்கு
பின்வாசல் வழியாக அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்மையான மாற்றத்தை உருவாக்குவதே தனது அரசியல் லட்சியம் என்றும் அண்ணாமலை கூறினார்.
கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை ‘வி த லீடர்ஸ்’ அமைப்பு கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இதுதொடர்பாக இரு மாநில முதல்வர்களையும் அழைத்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
2029 தேர்தலில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு
2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் ஜென்ஸீ தலைமுறை இளைஞர்களின் பங்கு அதிகமாக இருக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். பழைய பாணியில் தனிநபர்களை விமர்சிக்கும் அரசியலைக் கடந்து, வேலைவாய்ப்பு, வளர்ச்சி மற்றும் மக்களின் அடிப்படை வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் கொள்கைகளை முன்னிறுத்தும் அரசியலே எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும் என்றும் அவர் கூறினார்.



