கருணாநிதி பெயரை குறிப்பிட்ட அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு: முதல்வர் விஜய் சார்பில் ‘சாரி’
சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அமைச்சர் அவையில் பேசியது தவறுதான் எனக் கூறிய முதல்வர் விஜய், அமைச்சர் சார்பில் ‘சாரி’ தெரிவித்து வருத்தம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் சில கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பேசிய கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். பின்னர் நடைபெற்ற விவாதத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தலைவரின் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் பேசுவது எந்த வகையில் நியாயம் என்றும், அதற்கு பதிலளிக்கும் வகையில் தாங்களும் பேசினால் பேரவையை எவ்வாறு நடத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, ‘முதல்வர், முன்னாள் முதல்வர்’ என்றுதான் குறிப்பிட வேண்டும் என்றும், பெயரை குறிப்பிடக் கூடாது என விதி இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த விதியை அனைவரும் கடைபிடித்தால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் சட்டப்பேரவையில் இதேபோன்று உறுப்பினர் ஒருவர் தலைவரின் பெயரை குறிப்பிட்டபோது, எம்ஜிஆர் எழுந்து, ‘கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும். மன்னிப்பு கேளுங்கள்’ எனக் கூறிய சம்பவத்தை நினைவுகூர்ந்தார். அதுபோன்ற கண்ணியத்தை சட்டப்பேரவையில் அனைவரும் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய் பேசுகையில், “உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டு அமைச்சர் பேசியது தவறுதான். அவர் சார்பில் நான் சாரி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார். இதன் மூலம் அமைச்சர் ரஞ்சித் குமார் பேசிய விவகாரத்தில் முதல்வர் விஜய் நேரடியாக வருத்தம் தெரிவித்தார்.



