அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு: ஆகஸ்ட் 19-க்கு விசாரணை ஒத்திவைப்பு
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீது புதுச்சேரி லாஸ்பேட்டை போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி, புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் தனது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றதாகவும், அங்கு மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாகவும் அமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இரு தரப்பினரும் சமரச தீர்வு மையத்தை அணுகி பிரச்சினைக்கு தீர்வு காண உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, சமரச தீர்வு மையத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் தரப்பில் ஆஜரானவர்கள், இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் அடுத்த வாரத்தில் சமரச தீர்வு எட்டப்படும் எனத் தெரிவித்தனர்.
இதற்கு நீதிபதி குறுக்கிட்டு, சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்ப முடியாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், இதுபோன்ற வழக்குகளை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பலாம் என ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை தாக்கல் செய்யுமாறு அமைச்சர் மரிய வில்சன் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.



