தஞ்சாவூரில் பதாகை அகற்றியதால் விசிகவினர் சாலை மறியல்; எஸ்ஐயை தாக்கிய இளைஞர் கைது
தஞ்சாவூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வைத்திருந்த பதாகை அகற்றப்பட்டதால் அதிருப்தியடைந்த அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை தாக்கியதாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் ரயிலடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு பதாகை வைத்திருந்தனர். அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அந்தப் பதாகையை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த விசிகவினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ரயிலடி சாலையிலும் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அங்கிருந்து சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க போலீஸார் முயற்சி மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், போராட்டம் நடைபெற்றதால் வழிவிடுமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்த போலீஸார் தலையிட்டு சமாதானப்படுத்த முயன்றனர்.
அப்போது போலீஸாருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காவல் உதவி ஆய்வாளர் அப்துல் ரஹீம், அந்த இளைஞரை தாக்கியதாகவும், அதற்கு பதிலாக இளைஞரும் அப்துல் ரஹீமை சரமாரியாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞரை போலீஸார் மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பதாகை அகற்றப்பட்ட விவகாரத்தில் தொடங்கிய போராட்டம், பின்னர் போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையிலான மோதலாக மாறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



