பாஜக புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: வானதி சீனிவாசனுக்கு பதிலாக ரூப்குமாரி சவுத்ரி நியமனம்
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அளவிலான புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் புதிதாக நியமிக்கப்பட்ட 65 நிர்வாகிகளில் 12 பேர் பெண்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், பாஜக தேசிய மகளிரணித் தலைவர் பொறுப்பில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சத்தீஸ்கர் மாநில பாஜக எம்.பி. ரூப்குமாரி சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய நிர்வாகிகள் அறிவிப்பின்படி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, ஆந்திர மாநில முன்னாள் பாஜக தலைவர் டி. புரந்தரேஸ்வரி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பாரதி ப்ரவீன் பவார், வர்ஷாபென் நரேந்திரபாய் தோஷி, ரேகா வர்மா மற்றும் டாக்டர் மதுசந்தகர் ஆகியோர் தேசிய துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வசுந்தரா ராஜே மற்றும் ரேகா வர்மா ஆகியோர் ஏற்கெனவே வகித்து வந்த தேசிய துணைத் தலைவர் பொறுப்பில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பாஜக தேசியச் செயலாளர்களாக கவிதா பட்டிதார், ஃபங்னான் கோன்யாக் மற்றும் சங்கீதா யாதவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் இதுவரை வகித்து வந்த பாஜக தேசிய மகளிரணித் தலைவர் பொறுப்புக்கு சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. ரூப்குமாரி சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், பாஜக சமூக வலைதள தேசிய இணை ஒருங்கிணைப்பாளராக ப்ரீத்தி காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய தேசிய நிர்வாகிகள் பட்டியலுடன் ஒப்பிடும்போது, தற்போதைய நிர்வாகக் குழுவில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
முந்தைய நிர்வாகிகள் குழுவில் தேசியச் செயலாளர் பதவியில் எந்தப் பெண்ணும் இடம்பெறாத நிலையில், தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தேசியப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கட்சியின் முக்கிய தேசியப் பொறுப்புகளில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தொகுதி மறுவரையறை மசோதாவை செயல்படுத்துவதில் பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில், புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலில் 65 பேரில் 12 பெண்கள் இடம்பெற்றிருப்பது கவனம் பெற்றுள்ளது.
இதனிடையே, ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, மகளிர் இடஒதுக்கீட்டை செயல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத பிரதிநிதித்துவம் கிடைப்பதையும், நாட்டின் கொள்கைகளை உருவாக்குவதில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதையும் விரைவாக செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.



