குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ‘கேரளா’ இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என பெயர் மாற்றம்
கேரளா மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, ‘கேரளா’ என்ற மாநிலத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என மாற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து, பெயர் மாற்ற மசோதா தற்போது சட்டமாகியுள்ளது.
கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதுடன், அதற்கேற்ப இந்திய அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் திருத்தம் செய்வதற்கும் இந்த மசோதா வழிவகுக்கிறது. அரசியலமைப்பின் 3-வது பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா, கடந்த செவ்வாய்க்கிழமை மக்களவையிலும், புதன்கிழமை மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான தீர்மானத்தை கேரள அரசு, கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் அந்த முன்மொழிவை மாநில சட்டப்பேரவையின் கருத்துக்காக அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, கேரள சட்டப்பேரவை பெயர் மாற்ற முன்மொழிவை ஏற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. தற்போது குடியரசுத் தலைவர் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதால், இந்திய அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் இடம்பெற்றுள்ள ‘கேரளா’ என்ற பெயர் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ‘கேரளம்’ என்ற பெயர் இடம்பெறும்.



