விசிகவும் தவெகவும் இணைந்து பயணிக்கும்; தமிழகத்தில் ஆளும் கட்சியாக விசிக வளர வேண்டும்: திருமாவளவன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ இன்று நடைபெற்றது. இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட உள்ள அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக தமிழர்களிடையே நிலவும் அச்சம் குறித்து பேசினார்.
இலங்கை அரசு உருவாக்கவுள்ள புதிய அரசியலமைப்பு சட்டம், கடந்த 77 ஆண்டுகளாக தமிழர்கள் எதிர்கொண்டு வரும் இனப் பாகுபாடு, அரசியல் உரிமைகள் மறுப்பு, இன நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மற்றும் தமிழர் அடையாள சிதைப்பு போன்ற பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமையும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார். முழுமையான ஒற்றையாட்சி முறையை திணித்து, தமிழ் மக்களின் வாழ்வுரிமைகளை பாதிக்கும் வகையில் சட்டம் வடிவமைக்கப்படுவதாகத் தெரிகிறது என்றும், தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சட்டம் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து தமிழக அரசியல் குறித்து பேசிய திருமாவளவன், “நாம் இப்போது அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம். வரும் காலத்தில் விசிக தமிழகத்தில் ஆளும் கட்சியாக வளர வேண்டும். இத்தனை காலம் நாம் ஆளும் கட்சியோடு கூட்டணி வைத்தோம். திமுக ஆளும் கட்சி, அதிமுக ஆளும் கட்சி, காங்கிரஸ் ஆளும் கட்சி. இன்று ஆளும் முதல்வர் ஜோசப் விஜய்யோடு கூட்டணி வைத்திருக்கிறோம். விசிகவும் தவெகவும் இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும். விசிகவும் ஆளும் கட்சியாக பரிணமிக்கும்” என்றார்.
மேலும், விசிக தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி என்பதை இந்த மாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் திருமாவளவன் கூறினார். மாநாட்டில் லட்சக்கணக்கான சிறுத்தைகள் திரண்டுள்ளதாக தெரிவித்த அவர், தொண்டர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக நீண்ட நேரம் பேச விரும்பினாலும் தொடர்ந்து பேச முடியாத நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார். அனைவரும் பாதுகாப்பாக கலைந்து செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



