தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: ‘டேக் டைவர்ஷன் அரசியல் வேண்டாம்’ – துரைமுருகன்
தமிழகத்தின் உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவம் பாதிக்காத வகையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், மேகேதாட்டு அணை விவகாரத்தில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் நலனுக்கும் மாநிலத்துக்குரிய பிரதிநிதித்துவத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் திமுகவுக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
முறையற்ற தொகுதி மறுசீரமைப்பால் இந்திய அளவில் ஏற்படக்கூடிய ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து, அதற்கு எதிரான வலுவான கருத்தை உருவாக்கி, பல்வேறு தரப்பினரின் ஒருமித்த குரல்களை ஒன்றிணைத்தது திமுகவும், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் தான் என்பதை நாடே அறியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக திமுக என்ன செய்ய வேண்டும் என அறிவுரை கூறும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தவெக அரசு ஆகஸ்ட் 8-ம் தேதி அழைப்பு விடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை அறிமுகப்படுத்துவது தொடர்பாக எந்த தகவலும் இடம்பெறாத நிலையில், ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து மட்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதை ஏற்க முடியாது என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக தமிழகத்துக்கான பிரதிநிதித்துவ உரிமை எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்றும், அவ்வாறு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானால் அதைத் தடுக்கும் முன்னணிப் படையாக திமுக செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டு வரும் விவகாரம் குறித்து விவாதிக்கவும், தமிழகத்தில் உள்ள கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் திமுக முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் காவிரி உரிமையை மீட்பதும், மேகேதாட்டு அணை கட்டப்படுவதைத் தடுப்பதும் மிகவும் முக்கியமானவை என குறிப்பிட்டுள்ள துரைமுருகன், தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, மேகேதாட்டு விவகாரத்தில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் வகையில் ‘டேக் டைவர்ஷன்’ அரசியலை தவெக அரசு மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



