நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.120 லஞ்சம்: தவெக அரசைச் சாடும் டிடிவி தினகரன்
தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்குச் சுமார் ரூ.120 வரை லஞ்சமும், எடை முறைகேடுகளும் நடைபெறுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மாவட்டங்களில் கோடை நெல் சாகுபடி செய்த விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் போது லஞ்சம் மறுத்தால், ஈரப்பதம் அதிகம் எனக் கூறி நெல்லை வாங்க அதிகாரிகள் மறுப்பதாகக் குற்றம் சாட்டினார்.
சமீபத்தில் உணவுத்துறை அமைச்சர் நடத்திய ஆய்விலேயே மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் பெறப்பட்டது உறுதியான நிலையில், லஞ்சம் கேட்டால் ‘இது முதல்வர் விஜய் ஆட்சி’ எனக்கூறிய விவசாயிகளுக்கு ‘லஞ்சம் மேலிடம் வரை செல்கிறது’ என்ற பதிலே கிடைப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
எனவே, அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு லஞ்ச முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், நிரந்தர கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் தவெக அரசை வலியுறுத்தியுள்ளார்.



