பழநி நில மோசடி: திமுக பிரமுகர், பதிவாளர் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் அதிரடி சோதனை!
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்த விவகாரம் தொடர்பாகச் சிபிசிஐடி போலீஸார் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான போலீஸார், நேற்று அதிகாலை 4 மணி முதல் மாவட்டப் பதிவாளர், சார்பதிவாளர், நிலத்தை விற்றவர், வாங்கியோர் மற்றும் திமுக நிர்வாகி உட்பட 10-க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய நிலத்தை விற்ற திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள், தண்டபாணி அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ் மற்றும் நிலத்தை வாங்கிய உடுமலைப்பேட்டை வெள்ளத்துரை, பழநி சேதுபதி ஆகியோர் தற்போது தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், திண்டுக்கல்லில் உள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் 5 மணி நேரம் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். இந்த வழக்கில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நீதிமன்றம் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தலைமறைவாக உள்ள சேதுபதியின் வீட்டிழும், அவரது நெருங்கிய நண்பரும் பத்திரத்தில் சாட்சி கையெழுத்திட்டவராகக் கருதப்படும் திமுக வார்டு செயலாளர் லட்சுமணன் வீட்டிலும் போலீஸார் சோதனையிட்டனர். லட்சுமணன் மாரடைப்பு காரணமாகக் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சொத்து பத்திரங்களை போலீஸார் எடுத்துச் சென்றனர். இதேபோல், சேதுபதியின் நண்பர் மயில்சாமி வீடு, ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த நிலத்தரகர் ஜெயபிரகாஷ் மற்றும் வழக்கறிஞர் சிவக்குமார் ஆகியோரின் வீடுகளிலும் 4 மணி நேரத்திற்கும் மேலாகச் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, பழநி பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சிபிசிஐடி எஸ்பி ஷாஜிதா தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்ட போலீஸார், அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். கடந்த ஜூலை 6-ம் தேதி நடைபெற்ற பத்திரப்பதிவு ஆவணங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், பழநி ரயில் நிலையப் பகுதியில் உள்ள மாவட்டப் பதிவாளர் சசிகலா வீட்டிலும் சோதனை நடத்தினர். திருப்பூர் மாவட்டம் பாப்பான்குளத்தில் உள்ள வெள்ளத்துரையின் வீடு பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்து உள்ளே நுழைந்த கோவை சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் கேசவன் தலைமையிலான போலீஸார் நிலப்பதிவு தொடர்பான முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இந்த நிலமோசடி விவகாரம் நெல்லை வரையிலும் நீண்டுள்ளது. திருப்புகழ் சுவாமிகள் மற்றும் முருகதாஸ் சுவாமிகள் அறக்கட்டளையின் நிர்வாகிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த பந்தல் அலங்காரம் செய்து வரும் சண்முகசுந்தரம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த குமரகுருபரன் மற்றும் சிவகுமார் ஆகியோரிடமும் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நிலத்தை விற்றவர் மற்றும் வாங்கியவர்களுடன் மொபைல் போன், வாட்ஸ்அப் அழைப்பு மற்றும் ஆடியோ மெசேஜ் மூலம் தொடர்பில் இருந்த பலரிடமும் விசாரணை நடத்தப் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.



