கார்கே பங்கேற்ற நிகழ்ச்சி மேடையில் ‘சுத்திகரிப்பு சடங்கு’: விசாரணைக்கு நட்டா உறுதி
உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் ‘சுத்திகரிப்பு சடங்கு’ நடத்தப்பட்டதாக எழுந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உறுதி அளித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு பாஜக ஆதரவு இல்லை என்றும், இது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 8-ம் தேதி மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நிறைவடைந்த பின்னர், அந்த இடத்தில் ‘சுத்திகரிப்பு’ சடங்கு நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. பாஜகவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஸ்ரீராம் சேனா அமைப்பினர் இந்தச் சடங்கை நடத்தியதாக உத்தராகண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியல் குற்றம்சாட்டியிருந்தார்.
மல்லிகார்ஜுன கார்கே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே இந்தச் சடங்கு நடத்தப்பட்டதாக கணேஷ் கோடியல் கூறியிருந்தார். சாதியின் பெயரில் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் எழுப்பிய மல்லிகார்ஜுன கார்கே, இதுபோன்ற சடங்கு மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் எனத் தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையிலான அடிப்படைக் கொள்கை வேறுபாட்டை இந்தச் சம்பவம் வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
மேலும், சம்பவம் தொடர்பாக நைனிடால் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரியவில்லை என்றும் கார்கே தெரிவித்தார். தீண்டாமைக்கு இணையான இந்தச் செயலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சரும் அவைத் தலைவருமான ஜே.பி.நட்டா, இதுபோன்ற சம்பவங்களை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது என்றும், சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார். பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் இந்த விவகாரத்தை தீவிரமாக கவனிப்பார் என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அதற்கு காரணமானவர்கள் யார் என்பது கண்டறியப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜே.பி.நட்டா உறுதி அளித்தார். அதேநேரத்தில், இந்த விவகாரத்தை அரசியல் நோக்கத்துக்காக காங்கிரஸ் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தீண்டாமை என்பது ஒரு பாவம் என்றும், கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகளை கடந்து அனைவரும் இதை கண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மனிதர்கள் அனைவரும் தூய்மையானவர்களே என்றும், ஒருவரை ஒருவர் ‘சுத்திகரிக்க’ வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை சி.பி.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். இந்த விஷயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.



