பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் பேச்சு; இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை
பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலில், இந்தியா–இஸ்ரேல் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை இரு தலைவர்களும் ஆய்வு செய்ததுடன், பாதுகாப்பு, தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதியளித்தனர். இருநாடுகளின் நீண்டகால நட்புறவை தொடர்ந்து மேம்படுத்தும் வகையில் இணைந்து செயல்படவும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழல் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அப்பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவ வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதுடன், தற்போதைய சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து, இருநாடுகளும் பரஸ்பர தொடர்பில் இருப்பது என்றும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஐந்து மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதல் இன்னும் முழுமையான தீர்வை எட்டாத நிலையில், பிராந்திய பாதுகாப்பு மற்றும் சர்வதேச சூழ்நிலை தொடர்பாக இரு தலைவர்களின் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது.z



