கார்கில் வெற்றி தினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் புகழாரம்
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சல், தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்து பெருமிதம் தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்புக்காக உயிரை பணயம் வைத்து போராடிய வீரர்களின் வீரமும், தேசப்பற்றும் என்றும் இந்தியாவின் பெருமையாக நிலைத்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1999-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியில் உள்ள டைகர் மலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. இதையடுத்து, இந்திய ராணுவம் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில் இரு தரப்புக்கும் இடையே பல மாதங்கள் கடும் போர் நடைபெற்றது. மே மாதம் தொடங்கிய இந்த போர் ஜூலை வரை நீடித்த நிலையில், இந்திய வீரர்கள் வெற்றியை பதிவு செய்தனர்.
ஜூலை 26-ஆம் தேதி கார்கில் பகுதியில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து, அந்த நாள் ஆண்டுதோறும் கார்கில் வெற்றி தினமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் இந்திய வீரர்கள் வெளிப்படுத்திய தைரியம் மற்றும் வீரத்தை நாடு என்றும் நினைவில் வைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ராணுவ வீரர்களின் அசைக்க முடியாத தேசபக்தியும், கடமை உணர்வும் எதிர்கால தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
இதனிடையே, கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து வீர மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், கார்கில் வெற்றி தினம் ஒரு சாதாரண நினைவு நாள் அல்ல என்றும், ஒவ்வொரு இளைஞருக்கும் தேசப்பற்று மற்றும் சேவை உணர்வை ஏற்படுத்தும் முக்கியமான நாளாகும் என்றும் தெரிவித்தார்.
தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை ஒரு நாட்டின் வலிமையான அடித்தளங்கள் என்பதை கார்கில் வெற்றி நமக்கு உணர்த்துகிறது என குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், இந்திய ராணுவம் தொடர்ந்து தனது வீரத்தை நிரூபித்து வருவதாக கூறினார்.
மேலும், இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்திய ஆயுதப் படைகள் தேவையான பதிலடியை வழங்கும் திறனுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உலகளாவிய முன்னேற்றத்தை நோக்கி பயணித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருவதாக ராஜ்நாத் சிங் விமர்சித்தார். இந்தியா மென்பொருள், தரவு மையங்கள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சியில் முன்னேறி வரும் நிலையில், பயங்கரவாத கட்டமைப்புகளை உருவாக்கும் முயற்சிகள் அந்நாட்டில் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பாதுகாப்பு என்பது எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் பொறுப்பு மட்டுமல்ல என்றும், ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும் என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை அடைய, கார்கில் வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.



