சபரிமலை தங்கம் மாயமான வழக்கு: திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் அதிரடி கைது!
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் தங்கம் காணாமல் போன விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் தலைவரான பி.எஸ்.பிரசாந்த் நேற்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு சபரிமலை கருவறை கதவு நிலைகள் மற்றும் துவார பாலகர் சிலைகளுக்குத் தங்க மின்முலாம் பூசுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டபோது கணிசமான தங்கம் திருடப்பட்டதாகக் கூறி சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விரிவான விசாரணையைத் தொடங்கியது.
கடந்த 2025-ம் ஆண்டு தேவஸ்வம் போர்டு தலைவராகப் பிரசாந்த் பதவி வகித்தபோது, 2019-ல் நடைபெற்ற தங்கம் திருட்டை மறைப்பதற்காக, பழுது ஏதும் இல்லாத துவார பாலகர் சிலைகளில் பழுது இருப்பதாகக் கூறி மீண்டும் அனுப்பி வைத்ததாகச் சிறப்பு புலனாய்வுக் குழு கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், தேசிய உலோகவியல் ஆய்வகத்தின் அறிக்கை மூலம், இந்த வழக்கில் குற்றவாளிகள் தங்கம் திருடிய முறை மற்றும் அதற்குப் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த தெளிவான அறிவியல் பூர்வ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆதாரங்களின் அடிப்படையில், திருவனந்தபுரத்தில் உள்ள இல்லத்தில் வைத்து பிரசாந்தை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர். மேலும், இதே வழக்கு தொடர்பாக தேவஸ்வம் போர்டின் முன்னாள் உறுப்பினர் அஜி குமார் மற்றும் திருவாபரண ஆணையர் ஆர்.ரெஜிலால் ஆகியோரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளையில், தான் கைது செய்யப்படுவதற்கு முன்பாக முகநூலில் பதிவிட்ட பிரசாந்த், தன் மீதான இந்த நடவடிக்கை முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 2019-ல் நடந்த தங்கம் திருட்டை வெளிக்கொண்டு வந்ததே தங்கள் நிர்வாகம் தான் என்றும் கூறி, தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.



