தனியார் நிறுவனம் ரூ.1,109 கோடி வங்கி கடன் மோசடி: தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் சிபிஐ சோதனை
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘குப்தா பவர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்’ என்ற தனியார் நிறுவனம், கனரா வங்கியில் சுமார் ரூ.1,109 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு நிதிமுறைகேடுகள் மற்றும் போலியான நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
அந்நிறுவனம் கூடுதல் கடன் வசதிகளைப் பெறுவதற்காகத் தங்கள் பங்குகளின் மதிப்பைச் செயற்கையாக மாற்றியமைத்ததுடன், வர்த்தக வரவுகளை உண்மைக்கு மாறாக உயர்த்திக் காட்டியுள்ளது. மேலும், நிதிநிலை அறிக்கைகளைப் போலியாகத் தயாரித்தும், வங்கியில் பெற்ற கடன் நிதியை வேறு வழிகளில் மடைமாற்றம் செய்தும் கனரா வங்கிக்கு ரூ.1,109 கோடி வரை பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து புவனேஸ்வரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர். அதன்படி, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் உத்தராகண்ட் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள அந்நிறுவனத்திற்குத் தொடர்புடைய 6 முக்கிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள உற்பத்தி ஆலை, கொல்கத்தாவில் உள்ள பதிவு அலுவலகம், உத்தராகண்டின் காசிப்பூர் தொழிற்சாலை மற்றும் புவனேஸ்வரில் உள்ள 4 இயக்குநர்களின் வீடுகளில் இச்சோதனை நடைபெற்றது. இதில் கைப்பற்றப்பட்ட பல முக்கிய ஆவணங்களின் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் அடுத்தகட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.



