பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே போலீஸார் இணைந்து மேற்கொண்ட கண்காணிப்பு பணியின்போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த 45 வயது நபர் பிடிபட்டார்.
பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் ஆர்பிஎஃப் போலீஸாரும், ரயில்வே போலீஸாரும் நேற்று இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் மைசூரு அசோகபுரத்தில் இருந்து பெரம்பூர் வழியாக சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த விரைவு ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
ரயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அவரை போலீஸார் மடக்கிப் பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மொத்தம் 1.369 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 39 ஆயிரத்து 356 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தங்கத்துக்கு உரிய சட்டப்பூர்வ ஆவணங்கள் எதுவும் அந்த நபரிடம் இல்லை என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை ஆர்பிஎஃப் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிடிபட்ட நபர் பெங்களூருவைச் சேர்ந்த அபிஷேக் (45) என்பது தெரியவந்தது. உரிய சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாமல் அனுமதியின்றி தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நகைகளை அவர் ரயிலில் கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் நகைகள், உரிய விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



