மூதாட்டி கொலை: 15 பவுன் நகைகளுக்காக 2 பேருடன் சேர்ந்து கொன்ற பணிப்பெண் கைது
சென்னை தியாகராய நகர் குப்புசாமி தெருவில் தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது வீட்டு பணிப்பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கில் கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தியாகராய நகர் குப்புசாமி தெருவைச் சேர்ந்த ராதா (80), கணவர் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அவர் வீட்டுக்குள் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக அவரது வீட்டு பணிப்பெண்ணான அம்மு (31) போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பாண்டிபஜார் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மூதாட்டி அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதனால் நகைகளுக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
தொடர்ந்து அம்முவிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தியதில், அவர் 2 பேருடன் சேர்ந்து மூதாட்டியின் முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அம்முவை போலீஸார் கைது செய்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் அம்முவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் 2 பேரை பிடிக்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அவர்களைத் தேடும் பணியையும் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.



