விபத்து இழப்பீட்டுத் தொகை காசோலை மோசடி வழக்கில் நீதிமன்ற பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை
விபத்து இழப்பீட்டுத் தொகை காசோலை மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நீதிமன்ற பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு உடந்தையாக செயல்பட்ட மகன் மற்றும் உறவினருக்கு தலா 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த விபத்து வழக்கு ஒன்றில், இழப்பீட்டுத் தொகையாக ரூ.10,565 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது நீதிபதியின் உதவியாளருக்கு உதவியாளராக பணியாற்றி வந்த அறிவுச்செல்வி என்பவர், நீதிமன்ற உத்தரவு நகலை திருத்தியதுடன், நீதிபதியின் கையெழுத்தை போலியாக பதிவு செய்து ரூ.4,78,000 தொகையை தனது பெயருக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதேபோல் மேலும் 6 விபத்து வழக்குகளின் நீதிமன்ற உத்தரவுகளை முறைகேடாக திருத்திய அறிவுச்செல்வி, மொத்தம் ரூ.38,79,982 இழப்பீட்டுத் தொகையை தனது பெயரிலும், தனது மகன் வரதராஜன் மற்றும் உறவினர் தமிழரசன் ஆகியோரின் பெயர்களிலும் சட்டவிரோதமாக மாற்றியதாக விசாரணையில் தெரியவந்தது.
குறிப்பிட்ட நபர்களின் பெயர்களில் இழப்பீட்டுத் தொகை வங்கிக்கு செலுத்தப்படுவதை கவனித்த வங்கி மேலாளர், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், 2024-ம் ஆண்டு வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்றது.
இந்த வழக்கில் 3 மாவட்ட நீதிபதிகள் உட்பட அரசுத் தரப்பில் மொத்தம் 44 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அரசுத் தரப்பில் 103 சான்று ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த 2 ஆண்டுகளில் 80 நாட்கள் நடைபெற்ற வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் தீர்ப்பு வழங்கினார். இதில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்படி, முதன்மை குற்றவாளியான அறிவுச்செல்விக்கு 9 பிரிவுகளின் கீழ் மொத்தம் 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட அவரது மகன் வரதராஜன் மற்றும் உறவினர் தமிழரசன் ஆகியோருக்கு 8 பிரிவுகளின் கீழ் தலா 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



