இந்தியாவில் தங்கத்தின் தேவை 6% சரிவு: அளவு குறைந்தாலும் மதிப்பு 50% உயர்வு – தங்க கவுன்சில்
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 6% குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக தங்க கவுன்சில் இந்தியப் பிராந்திய சிஇஓ சச்சின் ஜெயின் கூறுகையில், “கடந்த 2025-ம் ஆண்டின் இதே காலாண்டில் 139.7 டன்களாக இருந்த உள்நாட்டு தங்க தேவை, தற்போது 131.4 டன்களாக குறைந்துள்ளது. அளவின் அடிப்படையில் தேவை குறைந்திருந்தாலும் ரூபாய் மதிப்பின் அடிப்படையில் அது அதிகரித்துள்ளது.
ஏப்ரல் – ஜூன் காலாண்டில் ரூ.1,98,100 கோடி மதிப்பிலான தங்கம் வாங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வாங்கப்பட்ட ரூ.1,32,500 கோடி மதிப்பை விட 50% அதிகம். விலை அதிகமாக இருந்தாலும் இந்திய நுகர்வோர் தங்கத்திற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதையே இது காட்டுகிறது” என்றார்.
மேலும், “தங்கம் மீதான சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து, தங்கக் கடத்தல் மற்றும் சட்டவிரோத கருப்புச் சந்தை வர்த்தகம் அதிகரித்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் நாட்டின் இறக்குமதி செலவு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, அத்தியாவசியமற்ற முறையில் தங்கம் வாங்குவதை குறைத்து அந்நியச் செலாவணி கையிருப்பை சேமிக்க உதவுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.



