மினிமம் பேலன்ஸ் அபராதம் மூலம் நான்கு ஆண்டுகளில் ரூ.26,100 கோடி வசூலித்த வங்கிகள்: தகவல் வெளியீடு
குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து, கடந்த நான்கு நிதியாண்டுகளில் வங்கிகள் மொத்தமாக சுமார் ரூ.26,100 கோடியை அபராதமாக வசூலித்துள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவரம் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அளித்த விளக்கத்தில், வாடிக்கையாளர்களுக்கு சுமையைக் குறைத்து வங்கி சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், நாட்டில் செயல்படும் 12 பொதுத்துறை வங்கிகளில் 10 வங்கிகள் மினிமம் பேலன்ஸ் பராமரிக்காததற்கான அபராத வசூலை முழுமையாக நிறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு பொதுத்துறை வங்கிகள் மட்டும் அபராத விதிமுறைகளை மாற்றி, கட்டணத் தொகையை மறுசீரமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லாத அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு (Basic Savings Bank Deposit Account) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படுவதில்லை என்றும் அமைச்சர் விளக்கமளித்தார். இதன் மூலம் அந்த வகை கணக்குகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த நான்கு நிதியாண்டுகளில் மினிமம் பேலன்ஸ் விதிமுறைகளை பின்பற்றாத வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் மொத்தமாக ரூ.26,100 கோடி அபராதமாக வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தகவல், வங்கி கட்டணங்கள் மற்றும் வாடிக்கையாளர் நலன் தொடர்பான விவாதங்களுக்கு மீண்டும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.



