சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: பவுனுக்கு ரூ.1,680 அதிகரித்து ரூ.1.07 லட்சத்தைக் கடந்தது!
சென்னை: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம், சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகத் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக, உள்நாட்டுச் சந்தையிலும் தங்கம் விலை கடந்த 16-ம் தேதி வரை பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கண்டு வந்த நிலையில், அதன்பிறகு தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், கிராமுக்கு ரூ.210 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,430-க்கு விற்பனையானது. மேலும், சுத்தத் தங்கமான 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 208 ஆகப் பதிவாகியுள்ளது.
கடந்த 17-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800 ஆக இருந்த நிலையில், கடந்த 5 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,640 வரை உயர்ந்துள்ளது நுகர்வோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் தங்கத்தின் விலை, வரும் நாட்களிலும் மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.245-க்கு விற்பனையானது. அதேபோல, கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 வரை அதிகரித்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரமாக உயர்ந்தது.



