சமையல் எல்பிஜி கேஸுக்குப் பதில் எத்தனால் எரிபொருள்: புதிய கொள்கையை உருவாக்குகிறது மத்திய அரசு
வீடுகளில் சமையல் செய்யப் பயன்படுத்தப்படும் எல்பிஜி கேஸுக்குப் பதிலாக எத்தனாலை அறிமுகப்படுத்த மத்திய அரசு புதிய கொள்கையை உருவாக்கி வருகிறது. வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு ஆற்றல் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இதற்கான வரைவுக் கொள்கையைத் தயாரித்து வருகிறது. இதில் எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டங்கள், மானியங்கள் மற்றும் தனி விநியோகச் சங்கிலியை உருவாக்குவது போன்றவை இடம்பெறவுள்ள நிலையில், இக்கொள்கை செப்டம்பருக்குள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனாலில் இயங்கும் சமையல் அடுப்புகள் ஏற்கனவே சோதிக்கப்பட்டு வரும் நிலையில், பெட்ரோல் பங்குகளில் எத்தனால் விநியோக மையங்கள் அமைக்கப்படலாம். நுகர்வோர் இந்த ஏடிஎம்கள் மூலம் சிறிய கேன்களில் எத்தனாலை வாங்கிச் சென்று சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தற்போது இந்தியா எல்பிஜி இறக்குமதிக்கு வளைகுடா நாடுகளையே நம்பியுள்ள நிலையில், எத்தனால் பயன்பாட்டிற்கு மாறுவது நாட்டின் இறக்குமதிச் செலவில் சுமார் ரூ.2 லட்சம் கோடியைச் சேமிக்க உதவும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



