இந்தியாவில் யுபிஐ பயனர்களின் எண்ணிக்கை 55.49 கோடியாக உயர்வு: மத்திய நிதி அமைச்சகம் தகவல்
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையான யுபிஐ பயனர்களின் எண்ணிக்கை 55.49 கோடியை எட்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. சாமானிய மக்கள் முதல் வணிகர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் இந்தச் சேவையால், நாட்டில் ரொக்கப் பணப் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது.
கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற பல்வேறு செயலிகள் மூலம் நாளுக்கு நாள் யுபிஐ பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், என்பிசிஐ தரவுகளின் அடிப்படையில் 2026 ஜூன் மாத நிலவரப்படி யுபிஐ பயனர்களின் இந்த புதிய எண்ணிக்கையை மத்திய நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.
அதன்படி, 2025-26 நிதியாண்டில் யுபிஐ வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 24,161.69 கோடியாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ.314.23 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. இது கடந்த 2024-25 நிதியாண்டின் பரிவர்த்தனை எண்ணிக்கையான 18,586.60 கோடியை விடக் கணிசமான வளர்ச்சியாகும்.
யுபிஐ பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாகவும் வெளிப்படைத்தன்மையோடும் வைத்திருக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் என்பிசிஐ தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும், இந்தியாவையும் சேர்த்து உலகம் முழுவதும் தற்போது 13 நாடுகளில் யுபிஐ சேவை பயன்பாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



