ஈரானுடனான பேச்சுவார்த்தை நல்ல பாதையில் செல்கிறது: ட்ரம்ப் நம்பிக்கை தகவல்
ஈரான் உடனான பேச்சுவார்த்தைகள் நேர்மறையான முறையில் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
லாஸ் ஏஞ்சலஸில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தை சுமுகமான பாதையில் முன்னேறி வருவதாக தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே உருவாகி வரும் உடன்பாடு தொடர்பான முக்கிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வளைகுடா பகுதிக்குள் செல்லும் கப்பல்கள் ஈரானுக்கு அருகில் உள்ள வடக்கு கடல் வழித்தடத்தை பயன்படுத்தவும், வெளியேறும் கப்பல்கள் ஓமன் நாட்டின் கடல் பகுதி வழியாக செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த தற்காலிக ஒப்பந்த காலத்தில் எந்தவிதமான போக்குவரத்து கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், முக்கிய கடல் வழித்தடத்தில் உள்ள கண்ணிவெடிகளை அகற்ற ஈரான் மற்றும் ஓமன் நாடுகள் இணைந்து செயல்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே ஹார்முஸ் நீரிணை திறக்கப்படும் என ஈரான் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளைகுடா பகுதியில் முக்கியமான வர்த்தக பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை விவகாரம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேநேரத்தில், ஈரானுடனான பேச்சுவார்த்தை உடன்பாட்டில் முடிவடையாவிட்டால், அந்நாடு கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



