ஜோர்டானில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்; பதிலடியாக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்கா தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தாக்குதலுக்கு கடும் பதிலடி வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வந்தது. பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இரு தரப்பும் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் அறிவித்திருந்தார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடைபெறவில்லை என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நிலைமை மீண்டும் மாறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும், அதை அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மேற்கொண்ட பதிலடி தாக்குதல் குறித்து அந்நாட்டு ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. “தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தீவிரமான தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த தாக்குதல் தொடங்கியது. மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் மேற்கொண்ட முயற்சிக்கு பதிலடியாக இந்த வலிமையான தாக்குதல் நடத்தப்பட்டது” என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியதை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், ஈரானின் தெற்கு பகுதியில் ஏவுகணை மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடைபெற்றதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மேற்காசிய பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.



