தாய்லாந்தில் 3 இந்தியர்கள் கடத்தி சித்ரவதை; ரூ.70 லட்சம் கேட்டு மிரட்டிய 5 இந்தியர்கள் கைது
தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற 3 இந்திய இளைஞர்களை கடத்தி, ரூ.70 லட்சம் பணம் கேட்டு சித்ரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 5 இந்தியர்களை தாய்லாந்து போலீஸார் கைது செய்துள்ளதுடன், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தகவலின்படி, குறைந்த கட்டணத்தில் சுற்றுலா செல்லும் வசதி வழங்கப்படும் என கூறி, மூன்று இந்திய இளைஞர்களிடம் சுமார் ரூ.2 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர்கள் தாய்லாந்தின் சுவர்ணபூமி விமான நிலையம் சென்றடைந்தபோது, சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் என தங்களை அறிமுகப்படுத்திய சிலர் டாக்ஸி மூலம் பட்டாயாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பாங் லாமுங் மாவட்டத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை சட்டவிரோதமாக சிறைபிடித்ததாக கூறப்படுகிறது.
அங்கு மூவரின் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கடத்தல் கும்பல், அவர்களை விடுவிக்க ரூ.70 லட்சம் வழங்க வேண்டும் என்று மிரட்டியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பணம் கேட்டு அச்சுறுத்தியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், தாய்லாந்து போலீஸார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு 3 இந்தியர்களையும் மீட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அவதார் சிங், ஜக்ஜித் சிங், ரம்பாலக் குமார், சுக்பிர் சிங் மற்றும் குல்ரா சிங் ஆகிய 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் முக்கிய மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய தாய்லாந்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.



