சென்னை மெட்ரோவில் பயணம் செய்த முதல்வர் விஜய்; 2-ம் கட்ட திட்டப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு
தமிழக முதல்வர் விஜய் இன்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அவர், பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார்.
தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்றார். அங்கு பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு மெட்ரோ ரயிலில் ஏறி நந்தனம் மெட்ரோ நிலையம் வரை பயணம் செய்தார். பயணிகளுடன் அமர்ந்து பயணித்த அவரிடம் பொதுமக்கள் ஆர்வமாக பேசி, வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நந்தனம் சென்றடைந்த பின்னர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமையகத்துக்கு சென்ற முதல்வர் விஜய், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டப் பணிகளின் நிலை, செயல்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து கிண்டி கத்திப்பாரா பகுதிக்கு சென்ற முதல்வர், அங்கு 101 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ பாலத்தை ஆய்வு செய்தார். பின்னர் கிண்டியில் இருந்து சாலை வழியாக போரூர் சென்ற அவர், மெட்ரோ 2-ம் கட்ட வழித்தடத்தில் இயக்கப்பட உள்ள ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.
போரூரில் இருந்து பூந்தமல்லி வரை ஆளில்லா மெட்ரோ ரயிலில் பயணம் செய்த முதல்வர் விஜய், அதன் பின்னர் அதே ரயிலில் மீண்டும் போரூர் திரும்பினார். போரூர் மெட்ரோ நிலையத்தில் ஆய்வை நிறைவு செய்தார்.
முதல்வர் விஜய் மெட்ரோ நிலையங்கள் மற்றும் வழித்தடங்களில் ஆய்வு செய்தபோது, பொதுமக்கள் அதிகளவில் திரண்டு அவரை வரவேற்றனர். பலர் கையசைத்து உற்சாகம் தெரிவித்ததுடன், அவருடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.



