சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக புகார்: காவல் ஆணையரிடம் மேயர் பிரியா மனு
சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, தன்னை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்கள் மற்றும் தவறான பதிவுகள் பரப்பப்படுவதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம் அளித்த புகாரில், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னை பற்றிய தவறான தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருவதாக மேயர் பிரியா குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவுகள் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுவதாகவும், அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணுக்கும் அடையாளம் தெரியாத நபர்கள் மீண்டும் மீண்டும் தொடர்புகொண்டு தொந்தரவு அளித்து வருவதாகவும், இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்படுவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயர் பிரியா காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேயர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட பதிவுகள், பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள், சமூக வலைதள கணக்குகள் மற்றும் அவற்றின் ஐ.பி. முகவரிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தேவைப்பட்டால் இந்த வழக்கு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டு, சமூக வலைதள நிறுவனங்களிடமிருந்தும் தகவல்கள் பெறப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சென்னை மாநகராட்சி மேயரே ஆன்லைன் தொல்லை தொடர்பாக காவல் ஆணையரிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



