மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி நாளை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்: கூட்டமைப்பு
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எந்தவித நிபந்தனையுமின்றி அமல்படுத்த வலியுறுத்தி, அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் நாளை (ஜூலை 22) சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இட ஒதுக்கீட்டிற்கான தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் விளக்குகையில், நடப்பு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் தங்களது அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு மேலும் காலந்தாழ்த்தக் கூடாது என்பதை வலியுறுத்தியே இந்த ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்து குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.



