மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக; தமிழக அரசுக்கு தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!
தமிழகத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின்வெட்டுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் தேமுதிக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் தொடர்ந்து நிலவி வரும் மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு காரணமாகப் பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர், வணிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழல் மக்களின் அன்றாட வாழ்க்கையையும், விவசாய உற்பத்தியையும், தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளையும் பெரிதும் பாதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் சிரமத்திற்கு உள்ளாகும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார். எனவே, மின்சாரத் துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சுமையைக் குறைக்கும் வகையில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தேமுதிக சார்பில் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயத்திற்குத் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் இடங்களில் இலவச மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரேமலதா கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான புதிய திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு, தமிழகத்தை மீண்டும் மின் மிகை மாநிலமாக மாற்ற இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.



