21 அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதில் தவறில்லை: உயர் நீதிமன்றம்
அதிமுக கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறப்பட்ட 21 அதிமுக எம்எல்ஏக்கள், கட்சித் தலைமையிடம் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை பேரவைத் தலைவர் கைவிட்டதில் என்ன தவறு உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 13-ம் தேதி தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். கட்சி கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி, அந்த 25 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்திருந்தார்.
இதனிடையே மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். எஞ்சிய 21 அதிமுக எம்எல்ஏக்களும் கட்சித் தலைமையிடம் மன்னிப்பு கோரி கடிதம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 21 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையைத் திரும்பப் பெறுவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேரவைத் தலைவருக்கு மீண்டும் கடிதம் அளித்தார். இதனை ஏற்ற பேரவைத் தலைவர், 21 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவதாக உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் பி.வி.செல்வக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல், கொறடா உத்தரவை மீறி கட்சிக்கு எதிராக வாக்களித்த எம்எல்ஏக்களுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் அரசியல் கட்சிகளுக்கு இல்லை என்று வாதிட்டார். மேலும், தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டிருப்பது அரசியல் சாசனத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பேரவைத் தலைவர் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், இது சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிக்கும் அதன் எம்எல்ஏக்களுக்கும் இடையிலான விவகாரம் என வாதிட்டார். கொறடா உத்தரவை மீறியவர்களை கட்சித் தலைமை மன்னித்துள்ளதால் அவர்கள் மீண்டும் அந்தக் கட்சியின் உறுப்பினர்களாகவே தொடர்கிறார்கள் என்றும், இதுதொடர்பாக மூன்றாவது நபர் பொதுநல வழக்கு தொடர முடியாது என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்களை கட்சித் தலைமை மன்னித்துள்ளதால் அவர்கள் அந்தக் கட்சியின் உறுப்பினர்களாகவே நீடிப்பதாக தெரிவித்தனர். மேலும், 21 அதிமுக எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும், சட்டப்படி 15 நாட்களுக்குள் மன்னிப்பு கோரியுள்ளதால் அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இந்த நடவடிக்கையை பேரவைத் தலைவரும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதில் என்ன தவறு உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், சம்பந்தப்பட்ட கட்சி இந்த விவகாரம் தொடர்பாக எந்த வழக்கையும் தொடரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கட்சிக்கு சம்பந்தமில்லாத மூன்றாவது நபர் இந்த வழக்கைத் தொடர முகாந்திரம் இல்லை எனக் கூறி பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



