காயத்ரி கோபிசந்த் உட்பட 17 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு
காயத்ரி கோபிசந்த், திவ்யா தேஷ்முக், விதித் குஜராத்தி உள்ளிட்ட 17 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருதை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் அர்ஜுனா விருதும், ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா’ விருதும், பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் 2025-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை நேற்று அறிவித்தது. இதில் 17 விளையாட்டு வீரர்கள் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனினும், இந்த ஆண்டு ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா’ விருதுக்கு எந்த விளையாட்டு வீரரும் தேர்வு செய்யப்படவில்லை.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வுக் குழு முதற்கட்டமாக 24 பேரை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைத்திருந்த நிலையில், அதில் 17 பேருக்கு மட்டுமே மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர், வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி, செஸ் வீரர் விதித் குஜராத்தி, வீராங்கனை திவ்யா தேஷ்முக் உள்ளிட்டோர் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாட்மிண்டன் வீராங்கனைகளான காயத்ரி கோபிசந்த் மற்றும் ட்ரீசா ஜாலியும் விருது பெற உள்ளனர்.
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் ஐ.அருமைநாயகத்துக்கு வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
அர்ஜுனா விருது பெறுவோர்:
தேஜஸ்வின் சங்கர் (தடகளம்), பிரியங்கா கோஸ்வாமி (தடகளம்), நரேந்தர் (குத்துச்சண்டை), விதித் குஜராத்தி (செஸ்), திவ்யா தேஷ்முக் (செஸ்), தனுஷ் காந்த் (பாரா-துப்பாக்கி சுடுதல்), ராஜ்குமார் பால் (ஹாக்கி), சுர்ஜீத் (கபடி), ருத்ராம்ஷ் கண்டேல்வால் (பாரா-துப்பாக்கி சுடுதல்), ஏக்தா பயான் (பாரா-தடகளம்), அரவிந்த் சிங் (துடுப்புப் படகுப் போட்டி), அகில் ஷியோரன் (துப்பாக்கி சுடுதல்), ட்ரீசா ஜாலி (பாட்மிண்டன்), காயத்ரி கோபிசந்த் (பாட்மிண்டன்), லால்ரெம்சியாமி (ஹாக்கி), முகமது அஜ்மல் (தடகளம்), பூஜா (கபடி) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது முன்னாள் கால்பந்து வீரர் ஐ.அருமைநாயகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருதுக்கு பர்வீர் சிங், சோட்டே லால் யாதவ், நேஹா சவான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வாழ்நாள் சாதனைக்கான துரோணாச்சார்யா விருதுக்கு தர்மேந்திர யாதவ் மற்றும் வீரேந்தர் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.



